“வடக்கில் தமிழர்களின் வீடுகளை இராணுவத்தினர் உடைப்பதில் எந்தவித தப்பும் இல்லை” என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர நேற்று தெரிவித்தார்.
“அத்தோடு, தேசிய பாதுகாப்புக்காக இராணுவத்தினர் செய்யும் இது போன்ற செயல்களுக்கு தமிழர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் தமிழர்களின் வீடுகள் இராணுவத்தினரால் பலவந்தமாக உடைக்கப்படும் செயற்பாடு குறித்துக் கேட்ட போதே குணதாஸ அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“வடக்கில் தற்போது இராணுவத்தினரால் தமிழர்களின் வீடுகள் உடைக்கப்படுகின்றமைக்கும், காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமைக்கும் கடும் எதிர்ப்புகள் வருகின்றன. ஆனால், இராணுவம் செய்வதை ஒருபோதும் பிழை என்று கூறவே முடியாது. அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவே இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை தேடிக்கொள்ளாவிடின் அது நமது தேசிய பாதுகாப்புக்கே பங்கம் விளைவித்து விடும். இராணுவத்தினர் வடக்கில் இருப்பதாலேயே தமிழர்களுக்கு பாதுகாப்பும் தங்கியுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
இராணுவம் தற்போது உடைத்துள்ள வீடுகளில் எவரும் வாழவில்லை என்பதே உண்மை. அப்படியிருக்கையில், பாழடைந்த வீடுகளை உடைத்து நாட்டின் பாதுகாப்புக்காக பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது.
அதுமட்டுமல்லாது, வடக்கு என்பது தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமான பகுதியில்லை. அங்கு அனைவருக்கும் சம உரிமை காணப்படுகிறது. இதே செயலை இராணுவம் தெற்கில் செய்திருந்தாலும் நாம் அதற்கு ஆதரவு வழங்கியிருப்போம்.
இவர்கள் செய்வது ஒரு போதும் பிழையல்ல. இதைத் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இராணுவத்தின் இச்செயற்பாடானது ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கும் நன்மை விளைவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதனால், தமிழர்களும் இந்த செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி இராணுவத்தினருடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.