வடக்கில் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு: அங்கஜன்

வடக்கில் உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி மற்றம் விவசாய அமைச்சர் முன்னெடுத்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களுடனான குறித் கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், “தற்போது நாம் பல பகுதிகளிலும் குளங்களை புனரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அவற்றுக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் 7, 8 இடங்களில் வேலைகளை ஆரம்பித்துள்ளோம். வேலைகளை பார்வையிட்டுக் கொண்டுள்ளோம். நானும் ஓர் மாணவன் போல் தற்போது படித்துக்கொண்டு இருக்கின்றேன்.

விவசாயம் சம்மந்தமாக தற்போது நோக்கினால் இங்கு உள்ள உத்தியோகத்தர்கள் தமக்கு மிஞ்சிய அளவிற்கு வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

இங்கு குறிப்பிட்டது போன்று 40 வீதமான ஆளணியை வைத்துக்கொண்டே இவர்கள் பணிகளை செய்து வருகின்றார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் விவசாய புரட்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதற்கு பின்னர் வந்த யுத்தம் உயிரிழப்புகளின் பின்னர் மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் போது ஊக்குவிப்பொன்று வராவிட்டால் அது பெரிய பாதிப்பாகவே இருக்கும்.

ஜனாதிபதி மற்றம் விவசாய அமைச்சர் ஆகியோர் வடக்கில் உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை வைத்துள்ளனர். அதற்காகவே என்னை பிரதி அமைச்சராக நியமித்துள்ளார்.

முதலில் நாங்கள் தூர நோக்கு சிந்தனையாக, விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றை தீர்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது 1000 குளங்கள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், விவசாய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதற்காக வடக்கில் உள்ள விவசாய வீதிகள் தொடர்பில் நாம் விபரங்களை திரட்டி வரும் வாரத்திற்குள் கையளித்து பெருமளவான நிதியை பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன், அமைச்சர் மற்றும் கிளிநொச்சி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts