வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள காணிகள் விற்பனை

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட கீரிமலை, மாவிட்டபுரம் ஆகியவற்றை அண்மிய பகுதிகளில் அமைந்துள்ள காணிகள், அவற்றினது உரிமையாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது மக்கள் மீளக்குடியேறி வருகின்ற நிலையில், அம்மக்கள் தங்களுக்கு மேலதிகமாகவுள்ள காணிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகள் இருந்தும், இடம்பெயர்ந்ததின் காரணமாக யாழ்ப்பாணத்தின் வேறு இடங்களில் காணிகளைக் கொள்வனவு செய்தவர்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களுமே, இவ்வாறு தங்களது காணிகளை விற்பனை செய்து வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்தமையால், மேற்படி பிரதேசங்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றிக் காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள காணிகளுக்கும் பெறுமதியில்லாமல் இருக்கின்றது. இந்த காணிகளை கொள்வனவு செய்யும் பலர் அங்கு திராட்சைத் தோட்டங்களை அமைத்தும், தென்னங்கன்றுகளையும் நாட்டியும் வருகின்றனர்.

இந்நிலையிலேயே இக்காணிகள், ஒரு பரப்பு 1 இலட்சம் ரூபாய் என்ற பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

Related Posts