வடக்கில் வர்த்தகப் பொருளாதாரம் வீழ்ச்சிகாண ஆரம்பித்துவிட்டது

2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், 02.12.2016 அன்று கைத்தொழில் மற்றும் வாணிபத் துறை அமைச்சு, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் சார்பாக கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய உரையின் முழுவடிவம்

எமது நாட்டில் வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், நுகர்வுத் தளம் – முதலீட்டுத் தளம் என்பவற்றில் போதியளவு மாற்றங்கள் ஏற்பட்டதும், அந்த உடன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒரு புறம் சுமார் 30 வருட காலங்கள் முடக்கப்பட்டிருந்த அத்தியாவசியத் தேவைகள் போதியளவு விஸ்தீரணப்படுத்தப்பட்டதும், அதற்குப் புறம்பான ஏனைய பொருட்களுக்கான தேவையானது மிகைப்படுத்தப்பட்டதுமான ஒரு நுகர்வுத் தளம் வளர்ச்சி பெற்றது.

நீண்ட காலமாக கவனத்தில் கொள்ளப்படாதிருந்த பௌதிக கட்டுமாணங்களின் மேம்பாடுகள், வெளி மாவட்டங்களுக்கான தரைப் போக்குவரத்து விஸ்தீரணம் பெற்றமை, மின்சார வசதிகள் 24 மணி நேரமும் உறுதிபடுத்தப்பட்டமை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்ற காரணிகள் இந்த நுகர்வுத் தளத்தை விஸ்தீரணப்படுத்துவனவாக அமைந்தன.

அதே நேரம், இழந்தவற்றை மீளச் சேகரித்துக் கொள்வதும், ஏனைய தேவைகளை ஈட்டிக் கொள்வதும் எமது நுகர்வோரின் எண்ணப்பாடாகவும் அமைந்திருந்தன. இதன் காரணமாக, இந்த நுகர்வுத் தேவையை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகச் செய்கைகள் திடீர் வளர்ச்சி பெற ஆரம்பித்தன. இதில், அப் பகுதி வர்த்தகர்கள் நேரடியாகவும், அப்பகுதி சாராத வர்த்தகர்கள் நேரடியாகவும், விநியோகத் தளத்தை அப்பகுதி வர்த்தகர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்ட செய்கைகளும் வளர்ச்சி பெற்றன. இதனூடாக இந்த இரண்டு தரப்பினரும் அங்கு வளர்ச்சி பெற்றிருந்த, திடீர்ப் பொருளாதாரச் சந்தையின் பயன்களைப் பெற்று வந்தனர்.

எனினும், இந்த நுகர்வு அலையானது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. இந்த நிலையில் நுகர்வுத் தேவைகளின் படிப்படியான வீழ்ச்சி காரணமாக, எமது வர்த்தகப் பொருளாதாரமும் வீழ்ச்சி காண ஆரம்பித்து விட்டது. இந்த வீழ்ச்சியானது தற்காலிகமானது என எதிர்பார்த்து – அரச வங்கிகளின் ஊடாக கடன் பெற்று, கையிருப்புகளை குறைவில் வைக்காது அதன் மிகைக் களஞ்சியத்தைப் பேணியவர்களும், இதற்கென அரச வங்கிகள் கடன்களை மறுத்த நிலையில், வேறு நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று, மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களும், மேற்படி பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாத நிலையில், மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்ட ஒரு நிலையே வடக்கு மாகாணத்தில் நிலைத்துக் காணப்படுகின்றது என்பதை இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

கைத் தொழிற்சாலைகளை மீளப்புனரமைப்புச் செய்து அவற்றை செயற்படுத்த வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் எமது பொருளாதாரத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் கைத்தொழில் மற்றும் வாணிபத் துறை அமைச்சின் தேவையானது அத்தியவசியமாகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது, ஏற்படுத்தப்பட வேண்டிய பொருளாதார ஈட்டு நடவடிக்கைகள் உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தியதான, உள்ளூர் விற்பனைச் சந்தையை மாத்திரம் நம்பியிராத தொழில் முயற்சிகளே தேவைப்படுகின்றன என்பதை அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். அந்த வகையில் கௌரவ அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் சில திட்டங்களை ஏற்கனவே முன்வைத்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஒன்று – ஏற்கனவே இருந்த, இருக்கின்ற கைத் தொழிற்சாலைகளை மீளப் புனரமைப்புச் செய்து அவற்றைச் செயற்படுத்துவது.

அந்த வகையில் பார்க்கும்போது, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை. இதை மீள செயற்படுத்துவது தொடர்பில் சூழல் ரீதியிலான சில விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏனைய சில பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் சீமெந்து பொதி செய்யப்படும் ஒரு பாரிய தொழிற்சாலை இயங்கி வருவதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அந்த வகையில், அதைப் போன்றதொரு முயற்சியைக் காங்கேசன்துறை பகுதியிலும் மேற்கொள்ள முடியும் என நான் நினைக்கின்றேன். அதே நேரம், காங்கேசன்துறைப் பகுதியில் ஏற்கனவே சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிவந்த நிலையில், மூலப் பொருள் காரணமாகத் தோண்டப்பட்ட நிலங்கள் மூடப்படக்கூடிய தேவைகளும் காணப்படுகின்றன.

தற்போது ஆனையிறவு உப்பளம் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதனை மேலும் மேம்படுத்தவும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள செயற்படுத்தவும், அதே போன்று, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சீனித் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் மீண்டும் செயற்படுத்தப்படும் நிலையில், எமது பகுதி போதியளவு பொருளாதார ரீதியில் வளர்ச்சியினைப் பெற இயலும் என்பதுடன், பல தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென நம்புகின்றேன்.

தனியார் கைத்தொழில் முயற்சியாளர்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

தனியார் கைத்தொழில் முயற்சிகளும் யுத்தத்திற்கு முந்திய காலங்களில் எமது பகுதிகளில் மிகவும் முன்னேற்றமான வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக, அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலை, நீர்வேலி பூட்டுத் தொழிற்சாலை மற்றும் கண்ணாடித் தொழிற்சாலை, நாவற்குழி இறால் தொழிற்சாலை, அரியாலை ஆணித் தொழிற்சாலை, சவர்க்கார உற்பத்தித் தொழிற்சாலை, பெனியன் தொழிற்சாலை, பாதணித் தொழிற்சாலை, தும்புத் தொழிற்சாலை எனப் பல தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதே நேரம் கடந்த காலங்களில் நாம் இவ்வாறான பல தொழிற் துறைகளை மீளப் புனரமைத்து, அவற்றை ஊக்குவித்திருந்தோம்.

அந்த வகையில், அல்லாரை தும்புத் தொழிற்சாலை, நீர்வேலி இரும்பு சார் உபகரணங்கள் உற்பத்தித் தொழிற்சாலை, வதிரி பாதணி தொழிற்சாலை, சங்கானை பற்றிக் தொழிற்சாலை போன்ற தொழில் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும். அந்த வகையில், புதிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேலும் இனங்கண்டு, அவற்றை ஊக்குவிப்பதற்கும், நாம் ஏற்கனவே ஆரம்பித்து வைத்துள்ள தொழிற்துறைகளை மேலும் முன்னேற்றுவதற்கும் கௌரவ அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகின்றேன். அதே நேரம், கடந்த காலங்களில் அச்சுவேலி கைத் தொழிற்பேட்டையை நாம் மீளப் புனரமைத்து, புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனையும் மேலும் முன்னேற்றத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வவுனியா கைத்தொழிற்பேட்டையை அபிவிருத்தி செய்து அதனையும் பலமிக்க ஒரு கைத் தொழிற் பேட்டையாக முன்னெடுக்குமாறும்,மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களிலும் புதிய கைத் தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறும் கௌரவ அமைச்சரை நான் கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் உள்ளூர் மூலதனத்தின் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கவுமே தேவைப்படுகின்றது. அதற்கு ஆரோக்கியமானதொரு முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் உள்ளூர்ப் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ளூர் நிறுவனங்களினதும், மனித வளத்தினதும் பங்களிப்புகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியமும் தேவைப்படுகின்றது என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எனினும், கடந்த கால யுத்தத்துடன் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியானது மனித, சொத்து மற்றும் வள இழப்புகளை அதிகமாகக் கொண்டுள்ள நிலையில், உடனடியாக வெளியுலகுடன் பாரியளவில் போட்டியிட்டு நிலைகொள்ளக் கூடிய வாய்ப்புகளை அதிகளவில் கொண்டிராத சூழலில், இப்பகுதி தொடர்பில் பொருளாதார ரீதியில் தன்னை ஓரளவுக்கேனும் நிலைப்படுத்திக் கொள்ள ஏதுவாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு விஷேட நிதியீட்டுத் திட்டங்கள், வரி ஏற்பாடுகள், முதலீட்டு ஊக்குவிப்பு செயற்பாடுகள், மனித வள மேம்பாட்டிற்கான விஷேட ஏற்பாடுகள், போட்டித் தவிர்ப்பு நடைமுறைகள் போன்ற விஷேட எற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

பாரம்பரிய தொழிற்துறைகள் குறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எமது நாட்டின் பாரம்பரிய தொழிற்துறைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, 100 வருடங்கள் பழைமையான மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த முந்தல், புளிச்சான்குளம் கிராம மக்கள், தங்களுக்குத் தேவையான ‘ஓவெல்ல’ மண் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். வடக்கைப் பொறுத்த வரையிலும் இந்த மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் பெருவாரியாகக் காணப்படுகின்றனர். இதே போன்று தென் பகுதியைச் சேர்ந்த எலதெனிய தேவேந்திர கிரமமானது பாரம்பரியமாக கம்மல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற கிராமமாகும். இங்கும் அவர்களுக்குரிய மூலப் பொருளான இரும்பு கிடைப்பதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பிரம்பு சார் கைத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்குத் தங்களது மூலப் பொருளான பிரம்புகளைக் கொண்டு வருவதில் தடைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான சிறு தொழில் முயற்சியாளர்களிடையே பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் காணப்படுகின்றன.

எனவே இத்துறை தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்துவார் என நம்புகின்றேன்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறை ஊக்குவிப்புக் கருதிய பல முன்மொழிவுகளைக் காண முடிகின்றது. இது ஓர் ஆரோக்கியமான நிலை என்றே கருதுகின்றேன்.
இந்த நிலையில், நவீன தொழில் நுட்பச் சந்தையின் கேள்விகளுக்கேற்ப மென் பொருள் உற்பத்திக் கிராமங்களை அமைக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுக்க முடியுமென நம்புகின்றேன். குறிப்பாக, வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கின்ற இளைஞர், யுவதிகள் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக இந்த முயற்சியை மேற்கொள்ள முடியும். இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, அத்துடன், இங்கு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சுத் தொடர்பாக சில விடயங்கள் தொடர்பிலும் அவதானத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

அண்மையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் பல அழிவுற்றதாகக் கூறப்பட்டது. அந்த அழிவுகளுக்கு முகங்கொடுத்துப் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு உரிய நட்டஈடுகள் உரிய முறையில் வழங்கப்பட்டதா என்பதை அறியத் தருமாறும், நாட்டில் வல்லப்பட்டைகள் வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்ற முயற்சிகள் தொடர்பிலும் அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், வல்லப்பட்டைகளை முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related Posts