வடக்கில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பொதி – கிராம சேவையாளர் ஊடாக விவரம் திரட்ட ஏற்பாடு

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப் பொருள் பொதிகள் வழங்கப்படவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

எனவே வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட – உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினை உள்ளவர்கள் தமது கிராம சேவையாளருக்கு அறிவிக்குமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

“வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து நாளாந்த வேதனத்தில் பணியாற்றுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம், வறுமை ஒழிப்புச் செயலணி, வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சு நடத்தினேன்.

இவ்வாறான குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் பொதிகளை வழங்குவதற்கு மாவட்டச் செயலாளர்களுக்கு நிதி விடுவிக்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் உண்மையாகவே பிரச்சினை உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அவற்றை விநியோகிப்பதற்கு வசதியாக கிராம சேவையாளர்கள் ஊடாக விவரம் சேகரிக்கப்படவுள்ளது.

அதுதொடர்பான அறிவுறுத்தல்கள் பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டு அத்தியாவசிய உணவுப்பொருள்கள் அடங்கிய பொதி விநியோகிக்கப்படவுள்ளது அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வசதி குறைந்த மக்கள் தங்களது விவரங்களை கிராம சேவையாளர்களிடம் வழங்கி அத்தியாவசிய உணவுப்பொருள்களின் பொதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று மாவை சோ.சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களின் விவரங்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக சேகரிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சமூக அமைப்புக்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதியை முதல்கட்டமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

Related Posts