வடக்கில் யாழ் மாவட்டத்திலேயே பால் உற்பத்தி அதிகம் ஆனால், பால் நுகர்வு வெகுகுறைவாக உள்ளது : பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் யாழ் மாவட்டத்திலேயே கூடுதலான அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பால் நுகர்வு மிகக் குறைவாக உள்ளது. பால்மாவே மிக அதிகஅளவில் நுகரப்படுகிறது. இதற்குப் பால்மா நிறுவனங்களே அடிப்படைக் காரணம் என்று வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்மராட்சி சரசாலையில் நேற்று கிராமிய அமைச்சின் கீழ் உள்ள மில்கோ நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஏறத்தாழ 31 இலட்சத்து 24 ஆயிரம் இலீற்றர் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பே அதிகம். ஏறத்தாழ 14 இலட்சம் இலீற்றர் பால் யாழ்ப்பாணத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாலை அருந்தும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டதால் பெருமளவு பால் வடக்குக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. பெப்ரவரி மாதம் வடக்கின் பால் உற்பத்தியில் அரைவாசியளவு, ஏறத்தாழ 16 இலட்சம் இலீற்றர் பால் தென்இலங்கை நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கின் கால்நடை அமைச்சு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கடுமையாக உழைத்து வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் அதிகளவு பால் தரக்கூடிய கலப்பினப் பசுக்களை உருவாக்கும் நோக்கில் வடக்கில் 2071 பசுக்கள் செயற்கை முறையில் சினைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாதத்தில் செயற்கைமுறைச் சினையூட்டலினால் 474 கலப்பினப் பசுக்கன்றுகள் பிறந்துள்ளன. பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கால்நடை அமைச்சு செயற்படும் அதேநேரம் பால் உற்பத்தி அதிகரிப்பால் எமது மக்களின் போசாக்கும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். ஆனால், தேசிய அளவில் போசாக்குக் குறைவான பிரதேசங்கள் வடக்கில் இருக்கின்றன.
உடன்பாலின் நுகர்ச்சி குறைந்து பால்மாவைப் பயன்படுத்தும் போக்கு எமது மக்களிடையே அதிகரித்திருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பால்மா போசாக்கானது என்ற பால்மா நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களே பிரதான காரணம். உடன்பாலை அருந்தினால் வருத்தங்கள் வரும், ஒவ்வாமை ஏற்படும் என்ற நம்பிக்கை பலரிடையே இருக்கிறது. பால்மாவின் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக, பால்மா உற்பத்தி நிறுவனங்களே இவ்வாறான பரப்புரையையும் திரைமறைவில் செய்து வருகின்றன. இங்கிருந்து பாலைத் தெற்குக்கு அனுப்பி, பால்மாவாக அதை மீளவும் வாங்கிப் பயன்படுத்தும் போக்கில் இருந்து விடுபட்டு உடன்பாலை அருந்துவதற்கு நாம் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன், உதவிப் பணிப்பாளர் வக்சலா அமிர்தலிங்கம், மில்கோ நிறுவனத்தின் உபதலைவர் பாலித சமரக்கோன், இயக்குநர் ரியூடோர் அமரசிங்க ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் பாற்பண்ணையாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். தெரிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்குப் பால் சேகரிக்கும் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts