வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் மேலும் இருவர் மருதங்கேணியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டம் பூநகரியைச் சேர்ந்த 11 பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
அவர்களிடம் அந்த விடுதியில் வைத்து மாதிரிகள் பெறப்பட்ட நிலையில், அவர்கள் அங்கிருந்து தப்பித்து பூநகரிக்குத் திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தப்பி வந்தமை தொடர்பாக கொழும்பிலிருந்து வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் மூவருக்கு தொற்று உள்ளமை தொடர்பபாக கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.
குறித்த மூவரும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் ஏனைய எட்டுப் பேரையும் சுயதனிமைப்படுத்தியிருந்தனர்.
அவர்கள் எட்டுப் பேரின் மாதிரிகள் நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஏழு பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.