வடக்கில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது

வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

06

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (20.09.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. ரூபாய் 5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணசபை அபிவிருத்திக்குத் தடையாக நிற்கிறது என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது. நாம் எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய எத்தகைய அபிவிருத்தித் திட்டத்தையும் இரு கைகூப்பி வரவேற்கத் தயாராகவே உள்ளோம். அவ்வாறான பல அபிவிருத்தித் திட்டத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கியும் வருகிறோம்.

போருக்குப் பிறகு வடக்கில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களும் தென் இலங்கை நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த அபிவிருத்திகள் எதுவும் எமது கன்னி நிலத்தைச் சூறையாடி விடக்கூடாது என்பதிலும் நாம் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது. வெறுமனே அபிவிருத்தி வேலைவாய்ப்பை வழங்குவதாக மாத்திரம் இல்லாமல், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாததாகவும் இருந்தால் மாத்திரமே அது நிலைத்து நிற்கும் அபிவிருத்தியாக நீடிக்க முடியும்.

அபிவிருத்தி நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்குமாக இருந்தால், எமது பிரதேசத்தின் பிரதான தொழில் முயற்சியான விவசாயம் பாதிக்கப்படும். விவசாயிகள் கூலி வேலைகளுக்குச் செல்லவே நிர்ப்;பந்திக்கப்படுவார்கள்.
போரின் பாதிப்புகளில் இருந்து எமது மக்கள் இன்னமும் மீண்டெழவில்லை. நாளை இவர்கள் எழுந்து நின்று ஆரம்பிக்கவுள்ள தொழில்முயற்சிகளுக்கான கதவுகளை அந்நிய முதலீடுகள் இப்போது அடைத்து விடக்கூடாது என்பதையும் நாம்; கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இவற்றைப் பற்றி நாம் பேசும்போதே, எங்களை அபிவிருத்திக்கு எதிரானவர்களாகக் காட்ட முயல்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதி விவசாயப்பணிப்பாளர் அ.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் இ.நிசாந்தன், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் கே.சத்தியகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

05

07

08

09

10

Related Posts