கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதல் கட்டமாக, வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சைகளை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருவதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
இந்த நிலையங்களில் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் இங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள் என்றும் வடக்கு மாகாணத்தில் இயங்கி வரும் சிகிச்சை நிலையங்களை தவிர மேலதிகமாக கிளிநொச்சியில் பாரதிபுரத்திலும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலும் புதிதாக சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு சுவாசத் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்க வேண்டிய நிலையும், சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவையும் இருப்பதால் மாவட்ட ரீதியில் வைத்தியசாலைகளை அதற்கு ஏற்றவாறு தயார்ப் படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாய்மாரை பராமரிக்க மாவட்டம் தோறும் அதற்கு தனியான ஒரு விடுதியினை சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் அதாவது பிரசவ அறையுடன் கூடியதாக அந்த விடுதி தயார்படுத்தப்பட்டுள்ளது என்றும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.