வடக்கில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் வல்வெட்டித்துறையில் திறந்துவைப்பு

பாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்துவைத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம். ஏ. சுமந்திரன் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள், வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்க 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டிருந்தமைக்கமைவாக இந்த திட்டம் 2017 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் இதுவாகும்.

இது 8 வழித் தடங்களைக் கொண்டமைந்துள்ளது .

கிளிநொச்சியில் இடையொத்த நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் கிளிநொச்சியில் அமைக்கப்படும் தடாகத்தில் 6 வழித் தடங்களே அமைக்கபட்டுள்ளன.

மேலும் தடாகமானாது சர்வதேச தர நீச்சல் போட்டிகளை நாடத்தக் கூடிய அதே வேளை, வருடம் முழுவதும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Related Posts