வடபகுதியில் பல்வெறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) வவுனியா புளியங்குளம் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “வட மாகாணத்தில் பல்வேறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ சேவைகளைப் பொது மக்களுக்கு வழங்கி வருகின்ற போதும் அவற்றின் சேவைகள் பூரணத்துவம் உடையன என்று கூற முடியாதுள்ளது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்தி அத்தியாவசியமானதும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகவும் அமைந்துள்ளன.
வருடா வருடம் பல நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் உருவாக்கி வருகின்ற போதும் இவ்வாறான மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்குப் போதுமான மருத்துவர்கள் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும்.
பல்கலைக்கழகங்களிலிருந்து வருடா வருடம் வெளியேறுகின்ற மருத்துவர்களில் கூடுதலானவர்கள் மேலதிகப் படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளை நோக்கிச் செல்கின்றனர்.
அதே நேரத்தில் எத்தனையோ வைத்திய நிபுணர்கள் அவர்களின் திறமை அடிப்படையில் மேலைத்தேய நாடுகளுக்கு சேவை புரிவதற்காக அழைக்கப்பட்ட போதும் அவர்கள் அந்த அழைப்புக்களை நிராகரித்து தமது மண்ணில் இங்குள்ள உறவுகளுக்கு மருத்துவ சேவைகளை ஆற்றி வருகின்றார்கள். அவர்களின் அளப்பரும் சேவைகளை நன்றியறிதலுடன் பாராட்டுகின்றேன்” என்று தெரிவித்தார்.