மகளிர் விவகாரத் துறைக்கு, 2016ஆம் ஆண்டு, 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், 2017ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாகக் காணப்படும் மகளிர் விவகாரத் துறையின் கீழ், போருக்குப் பின்னரான வட மாகாணத்தில், கடந்த காலப் போரினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மாற்று வலுவுடையவர்கள், முன்னாள் போராளிகள், போருக்குப் பின்னரான காலத்தில் இலகுவில் பாதிப்புக்குள்ளாகிய பெண்கள் என பலதரப்பட்டவர்களும் உள்ளனர். இவர்களது முன்னேற்றம் குறித்து, மகளிர் விவகாரம் என்னும் நோக்கெல்லைக்காக, விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்.
“அந்தவகையில், இத்துறைக்கு 2016ஆம் ஆண்டு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள், பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன.
“அதன் தொடர்ச்சியாக 2017ஆம் ஆண்டில், பெண்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழிற்பயிற்சிகள் வழங்குதல், பெண்களின் இயல்தகைமைகளை முன்னேற்றக்கூடிய பயிற்சிநெறிகளை ஒழுங்குபடுத்தி வழங்குதல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். சிறியளவிலான ஆடை உற்பத்தி நிலையங்களை நிறுவி, அதன் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
“இவை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு, நிதி ஒதுக்கீடு அதிகமாகத் தேவைப்படுகின்றது. இந்நிதித் தேவையினை, ஒதுக்கீடு செய்யப்படாது உள்ள சிறியளவு நிதியிலிருந்து பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளோம்” என தெரிவித்தார்.