வடபகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையினை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்பட்டன.
குறித்த விடயங்களை நேரடியாக ஆராயும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களை யாழ். வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வைத்த அதிகரித்த போதைப் பொருள் பாவனை என்ற கருத்தையே வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு தெறியப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் போதைப் பொருள் பாவனையினாலேயே பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதற்கமைய இன்றையதினம் வடக்கு முதல்வருக்கும் கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கும் இடையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய வடக்கு மாகாண சபையுடன் கொழும்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் முதலாவது செயற்பாடாகவும் இந்த நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.