வடக்கில் புனர்வாழ்வு வைத்தியசாலை அமைக்கத் திட்டம்

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

saththeyalingam

இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழில் நேற்று நடைபெற்றது.

இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சத்தியலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,

வடக்கு மாகாணத்தில் இன்றும் அதிகளவான தேவைகள் இருக்கின்றன. எனினும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையாக உள்ளன.

வடக்கில் கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் காரணமாக இங்குள்ள மக்கள் சொத்து மற்றும் உயிரிழப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர்.

அத்தோடு இந்தப் போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்றாலும் வடக்கு மாகாணத்தின் சுகாதாரக் குறிகாட்டி ஏனைய மாகாணங்களுக்கு நிகராகவே உள்ளது. வடக்கு மாகாணத்தின் விசேட தேவைகளை ஆராய்ந்து ஐந்து வருடத்திற்கான சுகாதாரத் திட்டமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுகாதாரத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை நிறையவே காணப்படுகிறது. குறிப்பாக மாகாணத்திலுள்ள 101 வைத்தியசாலைகள் உள்ளன.

இவற்றில் 37 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையே இருக்கின்றது.

இந்த நிலைமையானது நாட்டிலுள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படுகின்ற பிரதான குறைபாடாகும் என குறிப்பிட்டார்.

Related Posts