காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்ற கட்டளைகளை மீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்படும் விகாரைகள் ஒரு பௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னம். பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லா மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலைமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மதத் திணிப்புக்கள் தொடர்பில் மத விவகாரங்கள் அமைச்சர் நேரடியாக வந்து பார்வையிடவேண்டும். அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
புத்தபிரானின் போதனைகளையும் அவரது பஞ்சசீலக் கொள்கைகளையும் கைவிட்ட சில பௌத்த பிக்குகள் அவர்களின் பின்னின்று இயக்கும் சில அரசியல்வாதிகளின் தயவுடன் இந்தநாட்டில் அமைதியின்மையையும், இனமுறுகலையும் ஏற்படுத்தி இலங்கையில் இன, மத நல்லிணக்கத்தை இல்லாதொழிதுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இனப்பரம்பல் வீதத்தை மாற்றி அமைக்கமுயலும் பேரினவாத சக்திகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டு வரும் இந்த பௌத்தப் போக்கினைக் கடைப்பிடித்துவரும் சில பௌத்த பிக்குகள் இலங்கையின் அரசதிணைக்களங்களான, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தொல்பொருள் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம்,பாதுகாப்பு படைகள் என்பவற்றை வெளிப்படையாகவே வழிநடத்தி வருவது கடந்த காலத்தில் வெளிப்படையாகவே அவதானிக்கப்பட்டது.
ல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் பிரிவில், நாயாற்றுக்கு அண்மையில் உள்ள பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தை குருகந்த ரஜமகாவிகாரை எனக்கூறி கொலம்பகே மேதானந்த கீர்த்தி சிறி தேரர் என்ற பௌத்தபிக்கு ஆலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றை அமைக்கத் தொடங்கினார். இக்கட்டட வேலைகளை இவ்ஆலயத்தின் எதிர்த்திசையில் இருந்த இராணுவ முகாமின் இராணுவத்தினர் மேற்கொண்டனர். இதுதொடர்பில் 31823 இலக்கத்தில் வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று 2019.05.06இல் வழங்கப்பட்ட கட்டளைப்படி குறித்த இடத்தில் ஏனும் செயற்பாடுகள் செய்வதானால் சமாதானத்தைப் பேணி நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவேண்டும் என நீதிமன்றால் கட்டளையிடப்பட்டது.
இருந்தபோதும் பிரதேச சபையின் தடை உத்தரவையும் மீறி இவ் ஆலயத்தில் கொலம்பகே மேதானந்த கீர்த்திசிறீ தேரரால் பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. நீதிமன்ற கட்டளையைமீறிய இந்த நடவடிக்கையை இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு வேடிக்கை பார்த்திருந்தது. கொலம்பகே மேதானந்த கீர்த்திசிறீ தேரர் மரணமடைந்தார். இவரது உடலை கடற்கரையில் அடக்கம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றும் கட்டளையிட்டது. அந்தக் கட்டளையைமீறி ஞானசாரதேரர் தலைமையான பௌத்ததுறவிகள் குழு அவ்வுடலை பழைய செம்மலை பிள்ளையார் ஆலய தீர்த்தக்குளத்தில் அடக்கம் செய்தனர். எதிர்த்து நின்ற தமிழ்மக்களையும், சட்டத்தரணிகளையும் இலங்கைப் பொலிசார் துரத்தி துரத்தி அடித்தனர். பொலிசாரால் தாக்கப்பட்டு ஆலய பூசகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
முல்வைத்தீவு கொக்கிளாய் கிராமத்தில் நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு பௌத்தவிகாரை அமைக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை, அது ஒரு தொல்லியல் பிரதேசம் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். விடுதலைப்புலிகளின் காலத்தில் அங்கிருந்த தொல்பொருள் சின்னங்களுக்கு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படவில்லை.அங்கு தொல்பொருள் சின்னங்களுள் ஒன்றாய் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த திரிசூலம் ஒன்று காணப்பட்டது. அது பல நூற்றாண்டுகளாகவே சுற்றயல் கிராம மக்களால் வழிபடப்பட்டுவந்தது. கிராமியமுறையில் பொங்கல் செய்து படையலிட்டு பயபக்தியுடன் இம்மக்களால் வழிபடப்பட்டு வந்தது. ஆனால் இன்று பிடுங்கி எறியப்பட்டு இந்துமத வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன .
வவுனியா மாவட்டத்தில், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை வன்னியில் வாழும் இந்துக்களின் ஆதிவழிபாட்டுத்தலம். கடந்த வருடம் இங்கு சிவராத்திரி வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் இலங்கைப் பொலிசாரால் துரத்தியடிக்கப்பட்டனர். இங்கு வழிபாடு மேற்கொண்ட பரம்பரை பூசாரியும் இன்னும் 14 பேரும் சிவராத்திரியை வெடுக்குநாறிமலையில் அனுஸ்டித்ததற்காக, இரண்டு வாரங்கள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த வருடமும் சிவராத்திரி பூசைகள் மாலை 6. மணிக்கு பின் தொடர அனுமதிக்கப்படவில்லை.
இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக, அவர்களுடைய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு, அவர்களுடைய மரபு உரிமைகள் சிதைக்கப்பட்டு அம்மக்கள் நசுக்கப்பட்டு வரும் நிலைமை இன்னமும் தொடர்ந்து வருகின்றது. பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள அனைத்து மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்கமுடியும். இதுவே இலங்கையில் தொடரும் பௌத்த மேலாதிக்க ஆட்சியின் ஊழலின் சின்னம்.
எமது வழிபாட்டிடங்களில் எம்மை வழிபடவிடுங்கள். பௌத்தர்கள் அல்லாத இடங்களில் எதற்கு பாரிய பௌத்த விகாரைகள், இராணுவ முகாம்களில் பாரிய விகாரைகள் கட்டப்படுகின்றன. கடந்த கால ஆட்சியாளர்கள் இனவாதப் போக்குடன் அராஜகமான போக்குடன் செயற்பட்ட நிலைமைகளை இந்த அரசாங்கம் நீக்கவேண்டும். அமைச்சர் எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மதத் திணிப்புக்கள் தொடர்பில் நேரடியாக வந்து பார்வையிட வேண்டும். அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.