Ad Widget

வடக்கில் பால் உற்பத்தியில் 40 விழுக்காடு பால் வெளியே செல்கிறது

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் 40 விழுக்காடு பால் வடக்கைவிட்டு தனியார் நிறுவனங்களால் வெளியே எடுத்துச்செல்லப்படுவதாக கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04.05.2016) கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அங்கு அவர் உரையாற்றுகையில்,

வடக்கில் கடந்த 2015ஆம் ஆண்டில் 32.77 மில்லியன் லீற்றர் பசுப்பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 13.26 மில்லியன் லீற்றர் பாலை கார்கில்ஸ், நெஸ்லே போன்ற நிறுவனங்கள் வடக்கில் இருந்து வெளியே கொண்டுசென்றிருக்கின்றன. இது வடக்கின் மொத்தப் பாலுற்பத்தியில் 40 விழுக்காடு.

பசுப்பாலை நுகரும் அளவு எங்களிடையே குறைந்து வருகிறது. தேநீர்ச்சாலைகளில் பசுப்பாலுக்குப் பதிலாக அங்கரும் லக்ஸ்பிறேயும்தான் உள்ளது. பெரும்பாலான வீடுகளிலும் இதே நிலைதான். கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு அமைப்புகளினூடாகப் பால் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சென்று பால் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கேட்டால், காலையில் வெளியே சென்று பாலை வாங்கிவருவதற்கு நேரம் இல்லை என்று சொல்லப்படுகிறது. பசுப்பாலைக் குடித்தால் சில நோய்கள் வரும் என்ற தவறான நம்பிக்கை காரணமாகவும் பாலின் நுகர்ச்சி குறைவாக உள்ளது. படித்தவர்களிடையேகூட இந்தக் கருத்து நிலவுகிறது. இந்தக் கருத்துப் பரப்புரையை பால்மா நிறுவனங்களே ஆரம்பத்தில் முன்னெடுத்திருந்தன.

பசுப்பால் நுகர்வை அதிகரிக்கச் செய்வதற்கு எமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடக்கில் யாழ் மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் பாலின் உற்பத்தி அதிகமாக உள்ளது. முதற்கட்டமாக, இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாலைப் பாஸ்ரர் முறைக்கு உட்படுத்திப் பொதிசெய்து வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டில் யாழ் மாவட்டத்தில் பால் பதனிடும் தொழிற்சாலையொன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. வவுனியாவில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள பால் பதனிடும் நிலையம் சில மாதங்களில் இயங்கு நிலைக்குக் கொண்டுவரப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் செ.கௌரிதிலகன் ஆகியோரும் ஏராளமான கால்நடை வளர்ப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

02

03

04

05

06

07

08

09

10

11

12

Related Posts