வடக்கில் படையினரால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே இதனைக் கருத வேண்டிவரும். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலைமை. இதை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்வியாளர்கள் மீது எனக்கு சிறந்த மரியாதை உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களின் எதிர்பார்பது தமக்கு கீழுள்ள மாணவர்கள் சமூகத்தில் மிளிர வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் அதிகமாக நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டிய துறையாக இது இருக்கின்றது. மாணவர்களுக்கு உயரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
ஆசிரிய சேவையின் சம்பளம் குறைவானதாகவே இருக்கின்றது. சம்பள அதிகரிப்புக்காக அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய மூன்று கட்டங்களாக சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கப்பட்ட போதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சு போன்றவற்றுக்கு அதிகளவில் ஒதுக்காது அவற்றை கல்விக்காக ஒதுக்கலாம்.
இதேவேளை முன்பள்ளி ஆசிரியர்கள் விடயத்தில் படையினரால் நடத்தப்பபடுபவற்றில் 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது.
இதனால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே கருத வேண்டி வரும். இது ஏன் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நடக்கின்றது. இதனை மாற்ற வேண்டும்.
வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அங்கு கட்டிடங்கள் உள்ளிட்ட சில கருத்திட்டங்களை நிறைவு செய்ய 2 பில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது. இது தொடர்பில் பிரதமரும் கல்வி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் அங்கு கல்வித்துறையில் நிலவும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.கல்வி திணைக்களம் என்பது நாட்டின் இருதயமாகும்.
இங்கே பிரச்சினை ஏற்பட்டால் அனைத்து பகுதிகளிலும் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் காணப்படுகின்றது. வாழ்க்கையில் எதனையாவது அடைய வேண்டும் என்றே இவர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். இதன்மூலம் சிறந்த தொழிற்படையை நாங்கள் இழக்கின்றோம். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.