வடக்கில் படையைக் குறைத்தல் அல்லது முகாம்களை அகற்றுதல் என்ற பேச்சுக்களுக்கு இடமேயில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மக்களுடன் சமாதானத்தை உறுதிப்படுத்த ஹெல உறுமய முன்னிற்கும். – இப்படித் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க.
அத்துடன், வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், வடக்கு மக்கள் மஹிந்த – மைத்திரி ஆகிய இருவரில் எவருக்காவது வாக்களித்து தமது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை 50 சதவீதத்தால் குறைத்தல், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தையும் நீக்குதல், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லும் வகையில் அதிகாரப்பரவலாக்கலை வழங்குதல், யுத்தக்குற்ற விசாரணையை முன்னெடுத்தல் ஆகியவவை தொடர்பில் பொது வேட்பாளருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நன்றாக வாசிக்க வேண்டும். போர்க்குற்ற தண்டனை குறித்து பேச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பீரிஸுக்கோ பேசுவதற்கு உரிமை இல்லை.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவினூடாக எந்த யுத்தக் குற்றம் குறித்து விசாரிக்கப் போகின்றீர்கள்? என்ன தண்டனை வழங்கப் போகின்றீர்கள்? வெளிநாட்டு நிபுணர்களை நியமித்து சர்வதேசத் தலையீட்டுக்கு அரசுதான் இடமளித்துள்ளது. சர்வதேசத் தலையீட்டுக்கு இடமில்லை என நாம் உறுதிபடத் தெரிவித்துள்ளோம்.
அத்துடன், வடக்கில் படையினரைக் குறைப்பது, முகாம்களை அகற்றுவது என்ற பேச்சுக்கு இடமில்லை. வடக்கு மக்களுக்கு இராணுவத்தினரால் தடைகளை ஏற்படுத்த இடமளிக்கமாட்டோம். வடக்கு, கிழக்கு மக்களின் சமாதானத்தை உறுதிப்படுத்த ஹெல உறுமய முன்னிற்கும்.
அத்துடன், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் மீள்குடியேற்றப்பட வேண்டும். வடக்கு மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு மக்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும். மைத்திரிபால சிறிசேனவுக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அவர்கள் வாக்களித்து தமது வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும்” – என்றார்.