வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வேலையற்ற இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களுடைய கைத்தொலைபேசிக்கு ஒரு நபர் அழைப்பு விடுப்பார். அதில் யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட வங்கி கிளையில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அதற்காக அவர்களின், சுயவிபரக்கோவையை மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கோரி மின்னஞ்சல் முகவரி குறுஞ்செய்தி மூலம் அனுப்பபடும்.
அந்த மின்னஞ்சல் முகவரி குறித்த வங்கியின் பெயரைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதனை நம்பி சுயவிபரக் கோவையை அனுப்புவர்களுக்கு “நீங்கள் வேலைவாய்ப்பை பெற்று உள்ளீர்கள். அந்த வேலைவாய்ப்பு கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்த வங்கியில் வைப்பிலிடுங்கள் என பிறிதொரு வங்கி கணக்கிலத்தை கொடுப்பார்கள்.
அதனை நம்பி குறித்த வங்கி கணக்கிலக்கத்தில் 25 ஆயிரம் ரூபாயை வைப்பிலிட்டால் அதன் பின்னர் வேலைவாய்ப்பு வழங்குவதாக குறிப்பிட்ட நபரின் தொலை பேசி இலக்கம் தொடர்பற்று போகும்.
இவ்வாறாக கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல இளைஞர்கள் யுவதிகள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
அது தொடர்பில் குறித்த வங்கி முகாமையாளருடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த மோசடிக்கும் எமது வங்கிக்குக்கும் தொடர்பு இல்லை. அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் குறித்த மோசடி காரர் தொடர்ந்து அவ்வாறன மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிசார் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் முறைப்பாடு செய்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால் அருகில் தாங்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு உரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுகளை மேற்கொள்ளுமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பலர் பாதிக்கப்பட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுமாயின் மோசடி காரர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றார்கள்.