வட மாகாணத்தில் உள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் விடயத்தில் கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை விஸ்தரித்துள்ளது. அண்மையில் 200 தொழில் முயற்சியாளர்களுக்கு இது சம்பந்தமான பெறுமதி மிக்க தகவல்களை வழங்கும் வகையில் மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளை வங்கி நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரண்டு நிகழ்ச்சிகளும் வவுனியாவில் ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. இவை அனைத்தும் மத்திய வங்கியின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டன. ´தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் நிதி கற்கைகள்´ எனும் தொனிப் பொருளில் இவை இடம்பெற்றன.
கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாண பிரதான கிளையில் இருந்து வங்கியால் இதற்கென தெரிவு செய்யப்பட்ட 80 தொழில் முயற்சியாளர்கள் முதலாவது நிகழ்விலும், கிளிநொச்சி, அச்சுவேலி, சாவகச்சேரி, நெல்லியடி, ஸ்டான்லி றோட், மானிப்பாய், கொடிகாமம், சுன்னாகம், திருநெல்வேலி, மன்னார் மற்றும் வேலனை கிளைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 75 பேர் இரண்டாவது நிகழ்விலும் பங்கேற்றனர். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் வங்கியின் வவுனியா கிளையால் தெரிவு செய்யப்பட்ட 45 பேர் கலந்து கொண்டனர்.
இலங்கை மத்திய வங்கியின் ஆலோசகர் ஸ்ரீ பத்மறாதன் இந் நிகழ்வுகளில் பிரதான வளவாளராகப் பங்கேற்றார். கொமர்ஷல் வங்கியின் வட பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர், சிரேஷ்ட முகாமையாளர் வட மத்திய பிராந்தியம், மேற்சொன்ன கிளைகளின் முகாமையாளர்கள், மற்றும் இந்தக் கிளைகளின் அபிவிருத்தி கடன் பிரிவின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும், நுண் தொழில் முயற்சியாளர்களுக்கும் கொமர்ஷல் வங்கி ஏற்கனவே நாரம்மல, காலி, மொனறாகலை, வெல்லவாய, பதுளை, பசறை, பண்டாரவளை, வெலிமட, வெலிகம, கொக்கல, கராப்பிட்டிய, மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் இது போன்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளது.
வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதி பிரிவுகள் இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுரம், கிளிநொச்சி, பண்டாரவலை, வெல்லவாய, ஹிங்குராக்கொட, கலேவல, அச்சுவேலி, வவுனியா மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் செயற்படுகின்றது.
புதிய வர்த்தக முயற்சிகளை தொடங்குகின்றவர்களுக்கு அல்லது ஏற்கனவே உள்ளவற்றை விரிவு படுத்தும் திட்டம் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை இந்தப் பிரிவுகள் வழங்கி வருகின்றன. அத்தோடு வர்த்தக முயற்சிகளை விரிவுபடுத்த தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் என்பனவும் வழங்கப்படுகின்றன.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியே உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகளுள் கடந்த நான்கு வருடங்களாக இடம்பிடித்துள்ள ஒரேயொரு உள்ளுர் வங்கியாகும். 237 கிளைகள் மற்றும் 587 ATM இயந்திரங்களைக் கொண்ட வலையமைப்புடன் இந்த வங்கி செயற்படுகின்றது. 2014ம் ஆண்டில் இலங்கையின் மிகவும் பெறுமதி மிக்க தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கி கடந்த பல ஆண்டுகளாக இலங்கையின் தலைசிறந்த வங்கி என்ற ரீதியில் பல விருதுகளையும் வென்றுள்ளது. அத்தோடு 2013ம் ஆண்டில் நாட்டின் தலைசிறந்த 10 கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.