இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளதுடன், இலங்கையில் இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடும்.
இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும். எனினும் நாட்டில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை.
இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது. இந்தியாவின் தேவைகளுக்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நாம் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.