வடக்கில் தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கான சாதகமான பதில் கிடைக்கவில்லை: வட.மா.பிரதி தொழில் ஆணையாளர்

judgement_court_pinaiவடமாகாணத்தில் தொழில் பிணக்குகள் அதிகமாக இருப்பதனால் வடமாகாணத்திற்கு என தொழில் நீதிமன்றம் அமைப்பதற்கு நீதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் நாளாந்தம் தொழில் பிணக்குகள் அதிகரித்து வருகின்றன. அதனடிப்படையில், வடமாகாணத்திற்கு என யாழில் தொழில் நீதிமன்றம் அமைப்பது அவசியமென்றும், அதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம், கடந்த வருடம் தொழில் திணைக்களத்தினால், நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கான பதில் இதுவரையில், கிடைக்கவில்லை என்றும், நேற்றைய தினம் வடமாகாண ஆலோசனை சபை ஊடாக நீதியமைச்சருக்கு இரண்டாவது கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வடமாகாணத்தில் மாதாந்தம் 20 மேற்பட்ட தொழில் பிணக்குகள் தொழில் திணைக்களத்தில் முறையிடப்படுகின்றதாகவும், அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் 13 தொழில் பிணக்குகள் தொழில் திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தொழில் பிணக்குகளை தீர்ப்பதற்கு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தீர்த்து வைக்கப்படுகின்றதாகவும், இதுவரையில் 5 தொழில் பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், வடமாகாணத்திற்கென தொழில் நீதிமன்றம் அமைப்பது மிகவும் அவசியமென்றும், அதற்காக அவசியத்தினை கடிதம் மூலம் நீதியமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts