வடக்கில் தொழிற்துறை நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன

அடுத்த ஆண்டுமுதல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பொதியிடும் பணிகளுடன் ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இராசாயன தொழிற்சாலை ஆகியவற்றை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

epdp

கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றய தினம் (10) இடம்பெற்ற பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சின் திட்டங்களை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய அருங்கலைகள் பேரவை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, வடகடல் நிறுவனம் ஆகியவற்றுடன் கித்துள் ஆகியவற்றினால் நடப்பாண்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் குறித்த நிறுவனங்கள் ஊடாக அடுத்தாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன், மகிந்த சிந்தனைக்கு அமைவாகவும் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாகவும் நாடளாவியரீதியில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், பாரம்பரிய கைத்தொழில்கள் மட்டுமன்றி சிறுதொழில் துறைகளையும் அமைச்சின் கீழான குறித்த நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது.

இதேபோன்று கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு கீழான கைத்தொழிற் பேட்டைகளினது முன்னேற்றம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் அவற்றை மேலும் மேம்படுத்துவது மற்றும் அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கப்படவுள்ள தீர்மானங்களை தொடர்பிலும் அமைச்சின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

இதனடிப்படையில் பனைசார்ந்த உற்பத்திகள், தோல், துணி மற்றும் மட்பாண்டம், மரம் உலோகங்கள், புல், இறப்பர், சங்கீத இசைக்கருவிகள், கித்துள்சார்ந்த உற்பத்திகளை மேலும் நவீனமயப்படுத்தும் வகையில் அவற்றுக்கான தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதுடன் அவற்றின் ஊடாக உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே 2015 ஆம் ஆண்டுமுதல் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள காங்கேசன்துறை தொழிற்சாலையில் கல் அரைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் அதேவேளை, சீமெந்தினை பொதியிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆனையிறவு உப்பளம் அடுத்த ஆண்டு முதல் இயங்கும் பட்சத்தில் அங்கு மாதம் ஒன்றிற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலையையும் இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே வடபகுதியில் யுத்தகாலத்தில் சேதமடைந்த அல்லது பாதிப்படைந்த தொழிற்துறை நிறுவனங்கள் தற்போது நவீன வசதிகளைக் கொண்டமைந்த வகையில் புதுப்பொலிவுடன் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் இதன்மூலமாக வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொருதருணம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் மேலதிக செயலாளர்களான சுசந்த டி சில்வா, திருமதி மங்கலிக்கா உள்ளிட்ட அமைச்சின் கீழான நிறுவனங்களினது துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Posts