யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் ஏறத்தாழ இரண்டே முக்கால் இலட்சம் மோட்டார் வாகனங்கள் வாகனவரி செலுத்தியுள்ளன. இவை தவிர, வேறு மாகாணங்களில் பதிவுசெய்யப்பட்ட பெருந்தொகையான வாகனங்களும் வடக்கில் பயன்பாட்டில் உள்ளன. காற்றை மாசுபடுத்துவதில் பெற்றோலிய எரிபொருட்களில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் பெரும்பங்கு வகிப்பதால் , வடக்கில் தேவைக்கு மேலதிகமாக அதிகரித்துவரும் மோட்டார் வாகனங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வேலணை மத்திய கல்லூரியில் கடந்த செவ்வாய்க் கிழமை (04.06.2019) அதிபர் சி. கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
காற்றில் கலந்து வரும் மாசுக்கள் காரணமாக ஆண்டு தோறும் 7 மில்லியன் பேர் வரையில் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மரணங்களில் பெரும்பங்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலேயே நிகழ்கின்றது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டே இந்த ஆண்டு சூழல் தினத்துக்கான கருப்பொருளாகக் ‘காற்று மாசுபடுதலைத் தோற்கடிப்போம்’ என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் இறக்கின்றவர்களில் அரைவாசிப்பேர் பெற்றோலிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற புகை மாசுக்களாலேயே உயிர் துறக்கின்றனர். இதனால் வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் நாடுகளில் மின்சாரத்தில் இயங்குகின்ற மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகின்றன. அதேசமயம், பெற்றோலிய வாகனங்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்தும் வருகின்றன.
வடக்கு மாகாணத்தில் யாழ்மாவட்டத்திலேயே மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 1,58,358 மோட்டார் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டில் வாகன வரி செலுத்தியுள்ளன. இவற்றில் 1,25,910 மோட்டார் சைக்கிள்களாகும். மோட்டார் சைக்கிள் என்பது தேவை என்பதை விட இன்று இளைஞர்களின் அந்தஸ்தின் அடையாளமாக உள்ளது. அனேகமான வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை வைத்திருக்கிறார்கள்.
நாம் தினமும் சுமார் 15 இலீற்றர் வளியைச் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். எமது நுரையீரலின் காற்றுப்பைகளை சுத்தமான காற்றால் நாங்கள் நிரப்பவேண்டும் என்றால் மோட்டார் வாகனங்களின் தேவையற்ற பயன்பாட்டை அறவே தவிர்க்கவேண்டும். துவிச்சக்கரவண்டிகளில் பயணிக்கக்கூடிய தூரத்தையாவது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தாது துவிச்சக்கரவண்டியில் கடக்கவேண்டும். சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்துக்கும் ஆரோக்கியமான வாகனம் துவிச்சக்கரவண்டிகள் மாத்திரம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் நிறைவில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.