வடக்கில் தற்போதும் மிக மோசமான சூழல்: ஐ.நாவில் அறிக்கை

north வட மாகாணத்தில் மிக மோசமான சூழலே தற்போதும் காணப்படுவதாக அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இலங்கை தொடர்பில் மேற்படி இயக்கம் விசேட அறிக்கையொன்றினை பேரவையில் சமர்ப்பித்து பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களால் ஒன்றுகூட முடியாத நெருக்கடிமிக்க சூழலே காணப்படுகின்றது. பல்வேறு வகையான மனித இயல்புவாழ்க்கைக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்றன.

இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அமைதி ஊர்வலங்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன.

பல சந்தர்ப்பங்களில் பொது மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற அமைதி ஊர்வலங்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, இலங்கையில் இயங்குன்ற பொது பல சேனா என்ற அமைப்புக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களுடன் தொடர்புடையவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். கைதுசெய்யப்படுகின்றனர். இவ்வாறான நெருக்கடி மிக்க சூழல் இலங்கையில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதைவிட மிகவும் மோசமான சூழல் வட மாகாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இங்கு அரசியல் கட்சிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் முனனெடுக்கின்ற போராட்டங்கள் கலைக்கப்பட்டு, அந்தப் போராட்டங்களுடன் தொடர்புடையவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுகின்றனர். அத்துடன், நீதிமன்ற ஆணையுடன் பல அமைதி ஊர்வலங்களுக்குத் தடையும் பிரேரிக்கப்படுகின்றது.

Related Posts