வடக்கிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மீதே குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1ஆம் பிரிவுவை சேர்ந்த ரொஷான் ராஜபக்ஷ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சரித்.எ.பி.ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குறித்த இருவரும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதியில் வர்த்தகர்களை மிரட்டி கப்பம் கோரியதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டை செய்ததாகவும் அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பொலிஸ்மா அதிபர் குறித்த விசாரணை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பிரியசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.