வடக்கில் ஜனாதிபதி தலைமையிலேயே பிரசாரம்!

susil-peremajeyanthaவட மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலேயே பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வடக்குத் தேர்தல் நிலைமைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 3மாகாண சபைத் தேர்தல்களில் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகங்களை ஆளும் கூட்டணி ஆரம்பித்து விட்டது.

தற்போது தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் தற்போது சிறியளவிலான பிரசாரக் கூட்டங்களையே நடத்தி வருகின்றோம்.

இம்மாதம் 25ம் திகதியுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் செயற்பாடுகள்முடிவடைந்ததும் வீடு வீடாக சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதுடன் வடக்கில் பிரதான பிரசாரக் கூடடங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடாத்தப்படவுள்ள பிரதான பிரசாரக் கூட்டங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இதேவேளை, வடக்கில் அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் அங்குள்ள மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்கும் போக்கு காணப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவ்வாறான நிலைமை இல்லை. மக்களுக்கு நாங்கள் விடயங்களை தெளிவுபடுத்தி வருகின்றோம்.

மேலும் வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை அரசாங்கம் கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். அந்த வகையில் வடக்கில் யார் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்த விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீடுகளுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts