வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.
இராணுவ முகாம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
வடக்கு தமிழ் மக்களின் பகுதி, தெற்கு சிங்கள மக்களின் பகுதியென எல்லைகள் பிரிக்கப்படவில்லை வடக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களை விடவும் அதிகமான தமிழர்கள் தெற்கில் வாழ்கின்றனர். வடக்கில் எவ்வாறு சிங்கள மக்கள் வாழ முடியாதென குறிப்பிடுவது? யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது சிங்களவர்கள். வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்வது சிங்கள மக்கள். அவ்வாறு இருக்கையில் சிங்களவர்கள் வாழ முடியாது என குறிப்பிடுவது எவ்விதத்திலும் நியாயமற்றதாகும்.
வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவில்லை. வடக்கில் சிங்கள மக்கள் வாழ்ந்த நிலங்கள் மற்றும் அவர்களின் உரிமைகளையே மீண்டும் பெற்றுக் கொடுக்கின்றனர். யுத்த காலகட்டத்தில் பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர். அவர்களின் நிலங்களை யார் மீண்டும் பெற்றுக் கொடுப்பது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தனி ஆட்சியினை நடத்த முயற்சிக்கின்றது. தனி ஈழத்தினை உருவாக்கி மீண்டுமொரு பிரிவினைக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். எனவே, அதற்கு இடமளிக்க கூடாது.
வடக்கில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் தெற்கில் வாழும் தமிழர்களை என்ன செய்வது? அவர்களையும் வெளியேற்றவா கூட்டமைப்பு சொல்கின்றது? இன்று நாட்டில் பிரிவினை வாதத்தினை தூண்டுவதும் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை பரப்புவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரேயாவர். அவர்களை கட்டுப்படுத்தினால் நாட்டில் பிரிவினை வாதம் தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.