யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது’ என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த, தனது அடுத்த ஆட்சிக் காலத்திலும் ஜனாதிபதியாக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கிடையில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘குறிப்பாக மன்னாரில் முஸ்லீம் மக்களையும், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசத்தில் சிங்கள மக்களையும் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மாவட்டமாக மாறும் வாய்ப்புக்கள் இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘அண்மையில் வலிகாமம் வடக்கில் சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளின் கூட சிங்கள குடியேற்ங்கள், இராணுவக் குடும்பங்களுக்கான குடியிருப்புக்கள் போன்றன அமைத்து இந்த குடிப்பரம்பலை மாற்றும் வேலையாகவும் அமையலாம். இது தொடர்பில் ஐரோப்பிய தூதுவர்களுக்கு தெரிவிக்கும் போது, அதன் தார்ப்பரியத்தை அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள் இல்லை’ என்றார்.
‘அரசாங்கம் தற்போது எதுக்கெடுத்தாலும் தெரிவுக்குழு என்று சொல்லி வருகின்றது. இந்த தெரிவுக்குழுவிலும் நியாயம் கிடைக்கும் என்று சொல்லி வருகின்றது. இதற்குள் கூட்டமைப்பு சென்று இதில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவேண்டும். தெரிவுக் குழுவில் நியாயமான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளது. புத்திசாதுரியமாகச் செயற்படுவதாக நினைத்துக்கொண்டிருந்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு செல்லாது. சர்வதேசத்தின் தலையீடுகள் நிச்சயம் இருக்கும். அது எந்தமாதிரி அமையும் என்று இப்போது சொல்ல முடியாது’ என்றார்.
வடக்கு தேர்தலில் ஜனாதிபதியே வெல்வார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால் வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி கொள்வார். அதில் எவ்வித ஜயமுமில்லை’ என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மாகாண சபை தேர்தலில் அரசியல் பலம் மிக்க மூத்தவர் ஒருவரை நிறுத்தி தேர்தலில் பலத்தினை பெறவேண்டும். அதேவேளை, வடமாகாண சபை தேர்தலில் ஒற்றுமையுடன் செயற்படுவோம்’ என்றும் அவர் கூறினார்.
‘அதேவேளை, உள்ளூராட்சி சபைகளுக்குள் அதிகாரங்களை சரியாக செய்ய முடியாமல் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே பிரச்சினைகள் நடைபெறுகின்றன.
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் நான் இந்த கட்சி, நீ அந்த கட்சி என பிரச்சினை படுவதினாலேயே உள்ளூராட்சி அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
அத்துடன், வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றால், மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் செயற்படுத்த முடியும்’ என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய அரசின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது’
‘1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
‘தனிநாடு என்பது தமிழர்கள் அடைய முடியாத ஒரு கனவு என்றும் அவ்வாறு அது நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.
இருந்தபோதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொண்ட அவர், இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் கரையோரத்தில் உள்ள வீதியை எவ்வளவு செலவானாலும் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இவர்களின் இந்தச் செயற்பாடுகள் எல்லாம் தங்கள் நலன்களை மையப்படுத்தியதாகவே அமைந்ததே தவிர எங்கள் நலனிற்காக அல்ல. இந்நிலையில், அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது’ என்று சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
‘இன்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அது எவ்வளவு நடமுறைச் சாத்தியமானது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிலவேளைகளில் பொருளாதார ரீதியிலும் புவியியல் ரீதியிலும் இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் சீனாவைக் காட்டியே மஹிந்த ராஜபக்ஷ தனது காரியங்களை நடத்தி வருகின்றார்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘யுத்தம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி பல வாக்குறுதிகளை எம்மிடம் வழங்கியிருந்தார். அதற்கு எதிர்மாறாக அவர் இப்போது செயற்பட்டு வருகின்றார். யுத்தத்தினையும் புலிகளையும் காட்டி சிங்கள மக்களை தன்வசப்படுத்தி இருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரமாகக் செயற்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் அற்ற தீர்வாக சமஷ்டி தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்’ என்று சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.