வடக்கில் தனியாரின் காணிகள் அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, “வடக்கில் பலவந்தமாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை இனவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்” என்றும் சவால் விடுத்தார்.
காணி சுவீகரிப்பு என்பது வடக்கில் சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் பொய்ப்பிரசாரம் எனவும் கோத்தபாய குறிப்பிட்டார். வடக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகள் சுவீகரிப்புத் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் காணிகள், குறிப்பாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை; அபகரிக்கப்படவுமில்லை. சில இடங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தினாலும் அந்தக் காணிகள் மீளளிக்க முடியாத ஒரு நிலைமை இருக்குமாயின் காணி உரிமையாளருடன் பேசி அவர்களுக்குரிய காணி நட்டஈட்டைச் செலுத்திய பின்னரே காணியை நாம் ஏற்கிறோம்.
இதுதான் உண்மை நிலைமை. இதற்கப்பால் அரச காணிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றையே நாம் பொறுப்பேற்கிறோம். இன வாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதக் கண்ணோட்டத்துடன் இவற்றை நோக்கி தமிழ் மக்களிடம் தவறான அரசியலை நடத்தக்கூடாது.
வடக்கின் பாதுகாப்பு
வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முற்றாக அகற்றிவிட வேண்டுமெனக் கேட்கிறார்கள். அதிகளவான இராணுவ முகாம்கள் வடக்கிலா இருக்கின்றன? இராணுவ முகாம்கள் கூடுதலாக இருப்பது அநுராதபுரம் மாவட்டத்தில். இரண்டாவதாக கொழும்பு மாவட்டத்தில்தான் கூடுதலான இராணுவ முகாம்கள் உள்ளன. எனவே, கூடுதலாக இராணுவ முகாம்கள் வடக்கில் உள்ளன, அவை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கின்றன என்று தவறான தகவல்களை மக்களுக்கு வழங்கித் தவறாக வழிநடத்தக்கூடாது.
புலிகளை முறையிட்டார்களா?
புலிகள் இருந்தபோது எத்தனையோ தமிழர்களின் காணிகள் அவர்களின் கையகப்படுத்தி இருந்தார்கள். கொழும்பின் அரசியல் பிரமுகர் சார்லி மகேந்திரன் மற்றும் முன்னாள் மேயர் கணேசலிங்கம் போன்றவர்களுக்கும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அவற்றை நாம்தான் தீர்த்துவைத்தோம்.
புலிகளின் காலத்தில் தமிழர்களின் காணிகளும், சொத்துகளும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. இப்போது வீறாப்பாகப் பேசும் தமிழ்க் கூட்டமைப்பினரோ அல்லது வேறு எவருமோ புலிகள் காணிகளை அபகரித்துள்ளனர் என்று அப்போது அமெரிக்காவிடமோ அல்லது இந்தியாவிடமோ முறையிட்டார்களா என்று நான் கேட்க விரும்புகின்றேன்.
இப்போது தமிழ்நாட்டுக்குச் சென்று முறையிடுபவர்கள் அப்போதும் இதனைச் செய்திருக்கலாமல்லவா?
வடக்கில் நாம் புலிகளைப் போன்று செயற்படவில்லை. தனியாரின் காணிகளைக் கபளீகரம் செய்யும் எந்த நோக்கமும் எமக்குக் கிடையாது. அவ்வாறான திட்டங்களும் எம்மிடம் கிடையாது. இவ்வாறு குறிப்பிட்டார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய.