வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுளதுடன், ஆனைக்கோட்டை கூலாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள 8 வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மயிலிட்டி கலைமகள் வித்தியாலய முன்றலில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இவற்றுக்கான காணி பத்திரங்களை அரச அதிபர், சங்க தலைவர், மற்றும் கிராம சேவையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும் அதனுடன் உள்ள 3 ஏக்கர் நிலப்பரப்பு பத்திரம் இராணுவ கட்டளை தளபதியால் யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமாரிம் வழங்கப்பட்டது, குரும்பசிட்டி கிராம அபிவிருத்தி சங்க கட்டத்திற்குரிய (ஜே/242) பத்திரத்திரம் சங்க தலைவர் பொன்னுத்துரை தங்கராஜாவிடம் கையளிக்கப்பட்டது, குரும்பசிட்டி சனசமூக நிலையம் (ஜே/243) தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் நடராசா உமாகரனிடம் வழங்கப்பட்டது. குரும்பசிட்டியில் இதனுடன் 12 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டது.
அத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஆனைக்கோட்டை கூலாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள 8 வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் (ஜே/133) கிராமசேவையாளர் நிஷாந்தனிடம் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியினால் வழங்கப்பட்டது.
இன்று விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மயிலிட்டி துறைமுக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வைத்து இப்பாடசாலையினை விடுவிக்க நடவடிககை எடுக்குமாறு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியதுடன் இன்று விடுவிக்கப்பட்டது. இதேபோன்று ஆனைக்கோடை கூலாவடி இராணுவமுகாம் அமைந்துள்ள காணிகளை இராணுவத்துக்கு கடந்த ஆட்சியில் சுவீகரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சுவீகரிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடுகள் மக்களிடமே கிடைத்துள்ளன.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, யாழ்.மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர், மற்றும் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலி, வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச தவிசாளர், அரச அதிகாரிகள், என பொதுமக்களும் கலந்து கொண்டனர்.