தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்படவுள்ளதால், வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
“கள் இறக்கும் தொழில் செய்து பலர் தமது வாழ்வாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். கித்துள் மரத்திற்கு இல்லாத தடை எதற்காக பனை தென்னைக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறான தடையை கொண்டு வருவது தொடர்பில் மாகாண அமைச்சுடன் கலந்தாலோசிக்கவில்லை. ஏன் அவ்வாறு கலந்தலோசிக்கவில்லை.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், மக்களை திசை திருப்பபே இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என தோன்றுகின்றது. புகையிலை தடை செய்யப்பட்ட போது அந்த தொழிலை நம்பி வாழ்ந்த பலருக்கு நஷ்டஈடு கொடுக்கவில்லை மாற்று தொழில் வாய்ப்பு எற்படுத்திக்கொடுக்கவில்லை. அதே போலவே தற்போது கள் இறக்க தடை எனும் வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த தடையினை நாம் முற்று முழுதாக எதிர்க்கின்றோம். இந்த தடையால் பாதிக்கப்படபோகின்ற மக்களுக்குக்காக போராடுவோம்” என கூறினார்.