வடக்கில் கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும்: முதலமைச்சர்

வடமாகாணப் பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் துரையப்பா விளையாட்டு அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையேயான தடகளப் போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தற்கால மாணவ மாணவியர்கள் தமது கல்வி அறிவுகளை பிரத்தியேகக் கல்வி நிலையங்களிலேயே பெற்றுக்கொள்கின்றார்கள். பாடசாலைகளில் முறையாக போதிக்கப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு அண்மைக் காலமாக மேலெழுந்துள்ளது.

மூன்று வயது குழந்தையைக் கூட முன்பள்ளி ஆசிரியர்களிடம் மேலதிக வகுப்புகளுக்காக எமது பெற்றோர்கள் கூட்டிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

மூன்று வயதுப் பிள்ளை முன்பள்ளிக்கு செல்வதே முறையற்றது என்று நம்புகின்றேன். இதில் மேலதிக வகுப்பு என்பதை அக்குழந்தைக்கு கல்வியின் மீது வெறுப்புணர்வை உண்டாக்குகின்ற ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வீட்டிலுள்ள தாய்மார்கள் தாம் ஓய்வாக இருப்பதற்கும் அல்லது தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து ரசிப்பதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் அவர்கள் மேலதிக வகுப்புக்களுக்குத் தம் பிள்ளைகளைக் கொண்டு செல்கின்றார்களோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு குழந்தையும் தமது தாய் தந்தையர்களை எல்லாம் அறிந்தவர்களாகவே பார்க்கின்றார்கள். தமது தாய் தந்தையருக்குத் தெரியாத விடயங்கள் இவ்வுலகில் இல்லை என நம்புகின்றார்கள்.

அதனால் இக்குழந்தைகள் தமது தாய் தந்தையிடம் கற்கவே விரும்புகின்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அதற்கு ஏற்ற வகையில் பெற்றோர்களும் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts