வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது கல்வியின் அபிவிருத்தி குறித்து விளனக்கமளிக்கும் போது வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இதனால் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கில் அதிபர் வெற்றிடங்களும் நிலவுகின்றது. அத்துடன் பாடசாலை ஆசிரியர் தரத்தில் உள்ளவர்கள் அதிபர்களாக கடமையாற்றி வருகின்றனர். எனினும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் 2008ஆம் ஆண்டுடன் தொண்டர் ஆசிரியர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்குடன் புதிய அனுமதிகளை நிறுத்துமாறு வடக்கு ஆளுநரினால் கல்வி அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஒவ்வொரு வலையத்திற்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் தொண்டர் ஆசிரியர்கள் 539 பேருக்கு ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது சில பாடசாலைகளில் தொடர்ந்தும் தொண்டர் ஆசிரியர் அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த மாகாண சபை அமர்வின் போது கைதடியில் உள்ள மாகாண சபைக்கு முன்னால் 150 தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களது விபரங்கள் அனைத்தையும் சேகரித்து தருமாறும் அது குறித்து வடக்கு கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார் என்றார்.