வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கூடாது! 10 காரணங்களை கூறுகிறார் கம்மன்பில!!

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது என நேற்று சபையில் திட்டவட்டமாகக் கூறி, அதற்காக தான் கண்டுபிடித்த 10 காரணங்களையும் முன்வைத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

udaya kamanpila 7ds

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இதன்போது முன்வைத்த 10 காரணங்கள் வருமாறு:-

முதலாவது காரணம்:​- இறுதி யுதத்தில் சரணடைந்த 12 ஆயிரம் புலிகளுக்கு மிகக் குறுகிய காலமாக 3 வருடத்துக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு என்னதான் புனர்வாழ்வளிக்கப்பட்டாலும் ஆயுதம் மனப்பாங்கு அவர்களிடம் இன்னும் உள்ளது.

இரண்டாவது காரணம்:​- யுத்தத்தின் இறுதியில் படையினரிடம் சரணடையாது தப்பியோடிய புலிகள், மக்கள் மத்தியிலேயே இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆயுதத் தீர்வையே இவர்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது காரணம்:​- வடக்கில் தற்போதும் வெடிகுண்டுகள், தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்படுகின்றன.

நான்காவது காரணம்:​- இலங்கையின் 2600 வருட வரலாற்றில் வடக்கிலிருந்தே ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கிலிருந்து ஒரு ஆக்கிரமிப்பு மட்டுமே வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஏனைய அனைத்து ஆக்கிரமிப்புக்களும் வடக்கின் ஊடாக வந்துள்ளன.

ஐந்தாவது காரணம்:- வடக்கிலிருந்து கடல்மார்க்கமாக இந்தியா மிகவும் அருகில் உள்ளது. ஆயுதம், போதைவஸ்துக்கக் கடத்தல்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்திலும் இடம்பெறுவதற்காக சாத்தியங்கள் உள்ளன. இந்தக் கடல் மார்க்கம் இன்னும் அதி உச்ச பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆறாவது காரணம்:- வடக்கில் யுத்தத்தால் வீழ்ந்து போன அரச பொறிமுறை மீண்டும் வலுப்பெறவில்லை.

ஏழாவது காரணம்:​- சனத்தொகை அடர்த்தி குறைந்த இடங்களிலேயே இராணுவ முகாம்கள், ஆயுதக்களஞ்சிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அந்தவகையில் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாகாணமாக வடக்கு மாகாணம் உள்ளது. இங்குதான் பயன்படுத்தப்படாத நிலையில் பெருமளவிலான காணிகள் உள்ளன. தெற்கில் சனநெருக்கடியாக இடங்களே உள்ளன.

எட்டாவது காரணம்:​- வடக்கில் இராணுவ முகாம்கள் , படைத்தளங்கள், ஆயுதக் களஞ்சியசாலைகளை அமைக்கக் கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது.

ஒன்பதாவது காரணம்:​- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களது செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பத்தாவது காரணம்:​- நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன.

இவ்வாறாக 10 காரணங்கள் உள்ள நிலையில் வடக்கிலிருந்து ஒரு இராணுவ முகாமையே , ஒரு இராணுவ சிப்பாயையோ அகற்றக்கூடாது – என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Related Posts