யாழ். மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலகத் திறப்பு விழா தெல்லிப்பளை, ஆனைக்குட்டி, மதவடியில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது. அலுவலகத்தினைத் திறந்து வைத்து அங்கு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பூமியில் வாழ முடியாது, அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள், பரம்பரை பரம்பரையாகச் மேற்கொண்டு வந்த விவசாயத்தையும், மீன்பிடியையும் செய்ய முடியாமல் தொழில் இழந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக வாழ்கின்றனர்.
மறுபுறத்தில், எமது மக்களின் நிலங்களில் இராணுவம் உல்லாச விடுதிகளைக் கட்டி தொழில் நடத்துகின்றார்கள். நீச்சல் தடாகங்களில் நீந்துகின்றார்கள். எமது இன விகிதாசாரத்தைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் எமது பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
எமது மக்களில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் 115 முகாம்களில் எமது மக்கள் வாழ்கின்றார்கள். இதனை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு மேலாக, மேலும் சிலர் தனியாக வீடுகளை வாடகைக்குப் பெற்றும் வாழ்கின்றார்கள். அவர்கள் இங்கு வந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறக்கூடிய நிலைமையை ஏற்படுத்தி, மீண்டும் அம்மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில், மாகாண ஆட்சியை அமைக்க முயன்றோம். ஆனாலும் அது கைகூடவில்லை. கடந்த 60 வருட காலத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று சிங்கள அரசும் பௌத்த தேரர்களும் எம் இனத்தை அழிப்பதிலும் எமது கலாசார அடையாளங்களை இல்லாது செய்வதிலும் கடுமையாக முனைப்புக்காட்டி வருகின்றார்கள்.
தந்தை செல்வா காலத்தில் மயிலிட்டியில் ஒரு துறைமுகம் கட்டப்பட்டு வளமான முறையில் எம்மவர்கள் தொழில் செய்து வந்துள்ளார்கள். ஒரு காலத்தில் எமது பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட லொறிகளில் தென்னிலங்கைக்கு மீன்கள் உள்ளிட்ட கடலுணவுகள் கொண்டு செல்லப்பட்டன. அந்தளவுக்கு எமது பொருளாதார நிலைகள் வளம் பொருந்தியவையாக காணப்பட்டன’ என்று மாவை எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்தி