மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, மிகப்பெரும் ‘பயங்கரவாத அமைப்புடன் 30 ஆண்டுகள் போர்செய்து வெற்றிகொண்டுள்ளோம். தற்போது நாட்டை ஒருமித்த நாடாக பயணிக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு செல்கின்றோம். இவ்வாறான நிலையில் இந்த இடத்திலிருந்து எம்மால் நீங்க முடியாது.
அதுமட்டுமின்றி யுத்தத்தின் பின்னர் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இராணுவ முகாம்கள் அங்கு இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்து அமைச்சரவையில் பேசப்படவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.