வடக்கில் இன்று மைத்திரியின் பிரசாரக் கூட்டங்கள்! – ரணில், சந்திரிகா, ஹக்கீம், ரிஷாத், மனோ, பொன்சேகாவும் பங்கேற்பு

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார்.

my3-ranil-chantherecca

இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன உட்பட அரச தரப்பிலிருந்து எதிரணியில் இணைந்தோர் வருகின்றனர்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடம்பெறும் பிரசாரக் கூட்டங்களில் இவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.

மன்னாரில் காலை 8.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பை சந்தித்துக் கலந்துரையாடவுள்ள பொது எதிரணியினர், 9 மணிக்கு மன்னார் நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பர்.

அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் பொது எதிரணியினரின் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பொது எதிரணியினர், 3 மணிக்கு கிளிநொச்சி சென்று அங்கு நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொள்வர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால தலைமையிலான பொது எதிரணியினர் யாழ்.மாவட்டத்துக்குச் செல்வர்.

பிற்பகல் 3.30 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் செல்லவுள்ள இவர்கள், மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் நடைபெறும் பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பர்.

அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு யாழ்.மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் மைத்திரிபால தலைமையிலான பொது எதிரணியினர் சந்திப்பை நடத்துவர்.

Related Posts