வடக்கில் அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை:டக்ளஸ்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணியில் இணைந்தா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்தே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. போட்டியிடும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுடன் இணைந்து தாம் போட்டியிடப் போவதாக அமைச்சர் ஒருவர் வெளியிட்ட தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.தேர்தலில் கூட்டணி அமைத்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய குழு தொடர்ந்து ஆராயந்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் மக்கள் விரும்புகின்ற, அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற சாதகமான தீர்மானம் எடுக்க்ப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

தேர்தலில் தனித்தா அல்லது கூட்டணி அமைத்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் கட்சிக்கும் இரண்டுவகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனாலேயே இறுதி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஆராயந்து வருகிறோம். மக்கள் கருத்துக்களையும் கருத்தில் எடுத்துள்ளோம்.அனைத்து விடயங்களையும் தெளிவாக ஆராயந்து இன்னும் சில தினங்களில் கட்சியின் உறுதியான முடிவை அறிவிப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts