வடக்கில் அபிவிருத்தி பணிகள் அரம்பம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொது மக்களிடம் நேற்று கையளித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக நிலைபேறான மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்பேம் என்ற தொனிப்பொருளிலான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் கிளிநொச்சி அக்கராயன் பகுதியிலுள்ள 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதியை மக்கள் பாவனைக்காக நேற்று அமைச்சர் திறந்து வைத்தார்.

நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளித்துள்ளதுடன், கிளிநொச்சி இரணைமடுக் குள வீதியின் 36 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பாலத்தினையும் திறந்து வைத்தார்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுடன் உள்ளூராட்சி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதார் மஸ்தான், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன், வடமாகாண பிரதி அவைத் தலைவர் க. கமலேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ப. அரியரத்தினம் மற்றும் மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts