வடக்கில் அடுத்தக்கட்டமாக இடம்பெறவுள்ள பரிசோதனை நடவடிக்கை- வைத்தியர் கேதீஸ்வரன் அறிவிப்பு

வடமாகாணத்தில் அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவுபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “சமூக மட்டத்தில் கொரோனா பரம்பல் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொரோனா தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம்.

இதனடிப்படையில் அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 346 பேரை அடையாளம் கண்டநிலையில், அவர்கள் அனைவருக்குமான பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன.

அதில், 20 பேரை காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதித்திருந்தோம். அவர்களில் 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 4 பேருக்கு மூன்றாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் குறித்த 20 பேருக்கும் உணவு பரிமாறிய நான்கு இராணுவத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைவிட யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 26 பேருக்கு இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ், 23 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆராதனையில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் சோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் முதலாவது தொற்றாளரான தாவடியைச் சேர்ந்த நபருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தக் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதுமட்டுமன்றி கொழும்பு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக சென்றுவரும் பாரவூர்திகளின் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஒவ்வொரு மாட்டங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

இதுவரைக்கும், 411 பேருக்கு சமூக மட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். இவற்றில் 11 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Posts