வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட கோரி வழக்குத் தாக்கல்

வட மாகாணத்தில் அமைந்துள்ள புத்த விகாரைகளை பாதுகாக்கும் படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் தர்ஷன வேரதுவகே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் ,சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்பட சில அதிகாரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வடபகுதியில் நிலைநாட்டப்பட்டுள்ள பெளத்த உரிமைகள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர், இதன்படி சில புத்த சிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் புத்த மதத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இலங்கை அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட பகுதியில் அமைந்துள்ள பெளத்த உரிமைகளை கண்டிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த அவர், இதன் முலம் அரசியல் சாசனத்தை காப்பதாக வழங்கியுள்ள சத்தியபிரமாணத்தை முதலமைச்சர் மீறியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, வடமாகான முதலமைச்சரின் நடவடிக்கைகளின் முலம் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக தீர்ப்பு வழங்கும்படி மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள புத்த விகாரைகளுக்கு பாதுகாப்பு பெற்றுக்கொடுக்கும் படி மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts