வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான வேண்டுகோள்!

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் வடக்கைப் பொறுத்தவரைக்கும் புதியதொழில் முயற்சியாளர்கள் தற்பொழுது உருவாகிக்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு அதன்காரணமாக அவர்களின் முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான முயற்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம் தமது உற்பத்திகளை மக்கள் மத்தியில் சேர்ப்பிக்க முடியும் என்பதை ஆராய்ந்து செயற்பட வேண்டும்.

அத்தோடு, ஜனாதிபதியால் தொழில் முயற்சிகளுக்காக பெறப்பட்ட கடன்களை செலுத்த வேண்டிய காலப் பகுதியையும் நீடிப்பு செய்திருப்பது நாங்கள் அறிந்ததே. அதேபோல் யாழ்ப்பாணத்திலுள்ள முயற்சியாளர்கள் தமது பதிவுகளை எமது மன்றத்தின் ஊடாகப் பதிவுசெய்து கொள்ளவும். ஏனெனில் அரசாங்கத்தினால் நஷ்ட ஈடு வழங்கப்படுமேயானால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டார்.

Related Posts