Ad Widget

வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம்களுக்கு 21 ஆயிரத்து 663 வீடுகள்!

போரினால் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மற்றும் 1990 இல் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்டு தற்போது பெரும்பாலும் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா ஆகிய மூவரும் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

“நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்து மீள்குடியேற்றத்தின் நிமிர்த்தம் மீண்டும் வடக்குக்கு வரும் சிங்கள குடும்பங்களுக்கு 5,543 வீடுகளும் முஸ்லிம் குடும்பங்களுக்கு 16,120 வீடுகளும் தேவைப்படுவதுடன், மீள்குடியேற்றம் செய்யப்படும் கிராமங்களில் ஏனைய உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது” என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“வடக்கு மாகாணத்தில் இருந்து நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு, அமுல்படுத்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள பொருத்தமான முறைமையொன்றை பின்பற்றுவது பற்றி பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலானதும் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளடங்களானதுமான குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது” என்று மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts