வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது சாத்தியமற்றது – குகேந்திரன்

K-V-Kukantheran-epdpவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் இருந்தும் அவர்களைப் படிப்படியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (12) தெரிவித்தார்.

சரசாலை வடக்கு கிராம மக்களின் குறை நிறைகளை ஆராய்ந்து அம் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் சாணக்கியமான அரசியல் நகர்வுகளினால், இராணுவத்தை ஒரு சில பகுதிகளுக்குள் முடக்கி வைக்க முடிந்துள்ளது.
ஆயுதப் போராட்டத்தில் தோற்றுவிட்டால் அதிலிருந்து மக்கள் மீண்டு மேம்பாடடைவது மிக மோசமானதாகும். இதன் விளைவுகளையே நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் இனம் பல தடவை இலங்கை அரசினால் ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை விட தமிழத் தேசியம் கூறும் தலைவர்களால் தான் அதிகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறானவர்களை தூக்கி எறிவதன் மூலமே தமிழர்களுக்கான வாழ்வியலை வென்றெடுக்க முடியும்.

தமிழர்களது ஏக பிரதிநிதிகள் எனக் கூறுபவர்கள், வேண்டும் என்றே உங்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றார்கள். இனி வரும் நாளில் நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நிமிடமும் அரசியலை பிழைப்புக்காக நடத்துபவர்களுக்கு முடிவு கட்டுவதாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் நீங்கள் எமக்குத் தருவீர்களானால் அரசியலுக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

1977இல் இருந்து ஆக்கபூர்வமற்ற விடயங்களைத்தான் தமிழர்களது அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். இவர்களது தவறான வழிகாட்டல்கள் தான் பலதரப்பட்ட ஆயுத போராளிகள் அமைப்புக்கள் உருவாகக் காரணமாகின.
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது.

ஆட்சி நடத்தும் கூட்டமைப்பினர் திரும்பிப் பார்ப்பதில்லை என மக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் தேர்தல் காலத்தில் அவர்கள் வந்து கூறுபவற்றை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கின்றீர்கள். இச்செயற்பாடுகளால் தான் நீங்கள் வாழ்வியலில் முன்னேற முடியாது தவிக்கின்றீர்கள்.

ஜதார்த்தமான அரசியல் நகர்வுகளை ஏற்கக்கூடிய நிலைக்கு மக்கள் அனைவரும் வரவேண்டும்.

இராணுவத்தை வெளியேற்றுவோம் என கோசமிட்டு வடமாகாண சபை ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்றுவரை ஒரு இராணுவத்தை கூட விலக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

அன்று ஆயுதப் போரட்டமென்பது மிகச் சிறந்த வழியாக இருந்திருக்கலாம். அதனைக் கையில் எடுத்தால் அதில் தோல்வியடைந்திருக்கக்கூடாது. தோற்றுவிட்டால் அதிலிருந்து மீண்டு வாழ்வாதாரத்தில் மேம்பாடடைவது மிக மோசமானதாக இருக்கும் என்பது தான் வரலாறு. இதைத்தான் நமது இனமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts