வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியவற்றின் குடி நீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் ஒன்றினை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கென உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, 90 பில்லியன் ரூபா (அறுநூற்று எழுபத்து ஐந்து மில்லியன் டொலர்) தேவைப்படுவதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இதன் படி இந்தத் திட்டத்திற்கென இரண்டு கடன் உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயற்படுத்த, மூன்று பகுதிகளாக நானூற்று ஐம்பத்து மூன்று மில்லியன் டொலர்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன் வந்துள்ளது.
அத்துடன் அரசாங்கம் 108 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது. மிகுதியாகவுள்ள 114 மில்லியன் டொலர்களை வேறு கடன் உதவிகள் மூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுச் செலவாக 190 மில்லியன் டொலர்களை ஆசிய அபிவருத்தி வங்கி வழங்குவதுடன் 150 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்கும். அரசாங்கம் 40 மில்லியன் டொலர்களை முதலீட்டுச் செலவாக வழங்கும்.
இந்தத் திட்டத்தின் படி 3 பெரிய முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி அப்பர் கெலகர கால்வாய்த்திட்டம், வடமேல் மாகாண கால்வாய்த் திட்டம் , மினிப்பே இடது வங்கி கால்வாய் புணர்வாழ்வு ஆகியனவே இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும்.
இந்த மூன்று மிகப் பெரிய திட்டத்தின் கீழும் மேற்படி மாகாணங்களில் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்பர் எலகர கால்வாய்த்திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் விவசாயக் குடும்பங்களும், வடமேல் மாகாண கால்வாய்த்திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மினிப்பே இடது கரை கால்வாய் விவசாயத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் விவசாயக் குடும்பங்களும் நேரடியாகப் பயன் பெறவுள்ளன.
அத்துடன் இந்த நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குவதுடன் மக்களை சிறு நீரக நோயிலிருந்து பாதுகாப்பதும் நோக்கமாகும்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நீர்பானசத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை என்பவற்றின் மூலமும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான நிதி உதவி உடன்படிக்கையில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர.எச் எஸ். சமரதுங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சிறி விடோவற்றி ஆகியோர் நேற்றைய தினம் நிதி அமைச்சில் கையெழுத்திட்டனர்.(