கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்ளூர் மூலங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய மாகாணத்துக்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும். அதையடுத்து, கஹதுடுவவுக்கும், பெல்மதுல்லவுக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும், வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும் ஆரம்பிக்கப்படும்.
வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தம்புள்ளவில் ஆரம்பிக்கப்பட்டு, பொலன்னறுவ, கந்தளாய், திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக யாழ்ப்பாணம் வரை அமைக்கப்படும். இதற்கு 5.5 பில்லியன் டொலர் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை வவுனியா, கிளிநொச்சி வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் திருகோணமலைத் துறைமுகம் மற்றும், சுற்றுலாத் துறை வளர்ச்சி என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபையின் தலைவர், நிகால் சோலங்காராச்சி தெரிவித்துள்ளார்.