சிறீலங்காவில் வடபகுதிக்குப் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தினரிடம் பதிவை மேற்கொள்ளவேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் பிரசுரமாகியுள்ளது.
மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐரோப்பாவிலிருந்து வருகைதந்த ஒரு ஈழத்தமிழர் மனித உரிமை ஆணையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வடபகுதியில் கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலுள்ள பயண ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு முன் அனுமதியைப் பெறுமாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர பிரதிநிதிகளும் குறித்த ஈழத்தமிழருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு, வவுனியா ஓமந்தையூடாக வடபகுதிக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் இராணுவ விசாவைப் பெறவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குறித்த பகுதிகளுக்கு தரைமார்க்கமாகச் செல்பவர்கள் அங்கு காணப்படும் இராணுவச் சோதனைச் சாவடிகளில் இவர்களது விசா பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள இராணுவ படைப்பிரிவுகளின் அதிகாரிகள் கிராமமட்டத்தில் மறைமுகமான கண்காணிப்புக்களை மேற்கொள் வதற்கான விபரங்களை தயார்ப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து வந்த இரண்டு ஈழத்தமிழர்கள் இந்த மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.defence.lk/new.asp?fname=foreign_passport_holders_traveling_to_the_north_20141030_02