வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், ஒதுக்கப்பட்டுள்ள நிதி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
”வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருக்கின்றது.
மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவானது.
சட்டவிரோதமான மணல் அகழ்வானது வடக்கில் மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும். அத்தோடு ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்” எனவும் தெரிவித்தார்.
இதன்போது கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில்,
”வடக்கு மாகாணத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும். மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.