Ad Widget

வடக்கின் விவசாயத்தில் வெளியாரின் திட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை – விவசாய அமைச்சர்

போருக்குப் பிந்திய வடமாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளில் மத்திய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றன. வடக்கின் விவசாயத்தை மீளக்கட்டியெழுப்புவதில் வெளியாரின் முயற்சிகளை நாம் வரவேற்கும் அதேசமயம், இவர்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியும் உள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

IMG_0650

கடந்த வெள்ளிக்கிழமை (31.01.2014) முழங்காவில் பொதுமண்டபத்தில் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் அனுசரணையின்கீழ் பப்பாசிப் பழங்களை ஏற்றுமதி செய்யும் நோக்கில் நல்லினப் பப்பாசிக் கன்றுகளை வழங்கும் வைபவம் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

IMG_0703

அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,

பப்பாசிப் பழங்கள் சுவையானவை மாத்திம் அல்ல, மருத்துவக் குணங்களும் கொண்டவை. இவற்றில் காணப்படுகின்ற விற்றமின்களும் நார்களும் மாரடைப்பைத் தடுப்பதோடு குடற்புற்றுநோய் ஏற்படாமலும் பாதுகாக்கின்றன என்று ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆனால், றம்புட்டானுக்கும் மங்குஸ்தானுக்கும் அப்பிள் பழங்களுக்கும் கொடுக்கின்ற மரியாதையை உள்ளூரில் விளையும் பப்பாசிப் பழங்களுக்கு நாம் தருவதில்லை. பப்பாசியைக் குயில்களுக்கும் காகங்களுக்கும் உணவாகின்ற ஒரு தீண்டத்தகாத பழமாகவே பெரும்பாலானவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது பப்பாசி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பு உருவாகியிருக்கும் நிலையில் அதன் மதிப்பு உயர்ந்திருக்கிறது.

IMG_0697

எமது விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்தத் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியோடு முன்னெடுத்துள்ள சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்திற்கு நாம் நன்றி கூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நிறுவனம் வடமாகாண விவசாயத் திணைக்களத்துடன் இணைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பல நிறுவனங்கள் விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனைகளோ அனுமதியோ இல்லாமல் குறுக்குவழியில் தமது திட்டங்களைச் செயற்படுத்த முனைகின்றன. தன்னிச்சையாக இறப்பர் மரக்கன்றுகளும், சந்தனக் கன்றுகளும் விநியோகிக்கப்படுகின்றன. கரும்புச் செய்கைக்கெனப் பெருமளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

இஸ்ரேல் தோடம்பழ ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள ஒரு நாடு. ஒரு தோடம்பழத்தை விளைவிக்க ஐம்பது இலீற்றர்கள் தண்ணீர் தேவை. அதாவது, ஒரு தோடம்பழத்தை ஏற்றுமதி செய்யும் போது 50 இலீற்றர்கள் தண்ணீர் நாட்டைவிட்டு வெளியே அனுப்பப்படுகிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகவே நிகழும் என்று சொல்லும் அளவிற்கு உலகில் நீர் நெருக்கடி முற்றிக்கொண்டு வருகிறது. இதனால், தண்ணீர் பற்றாக்குறைவான இஸ்ரேல், தனது நீர்வளத்தைக் காப்பாற்றுவதற்காக இப்போது தோடம்பழச் செய்கையைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றது.

இதேபோன்றுதான் எமது மண்ணிலும் எவற்றை விளைவிப்பது, எவற்றை ஏற்றுமதி செய்வது என்பது பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இவற்றைத் தீர்மானிக்கும் உரிமை இந்த மண்ணைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்து வைத்திருக்கும் எமது விவசாயிகளுக்கு உரியதே தவிர வெளியாரிடம் இல்லை. வடமாகாண சபையொன்று உருவாகியுள்ள நிலையில், மாகாண விவசாயத் திணைக்களத்தின் அனுமதி பெற்றே நிறுவனங்கள் இங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். உரிய அனுமதி பெறாமல் விநியோகிக்கப்படும் பயிர்கள் பற்றி எமது விவசாயிகள் விழிப்பாக இருக்கவேண்டும். தவறினால், எமது விளைநிலங்களையெல்லாம் வெளியாருக்கெனப் பொருத்தமற்ற பயிர்களுக்குத் தாரைவார்த்துவிட்டு உணவுக்காகத் தென் இலங்கையை நம்பியிருக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்படும். அரசும் இதையேதான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts